இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன், மெயில் கார்டு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதாகவும், இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 60,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் செய்திகள் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய ஊழியர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும். மொத்தமுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களின் வாயிலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், குறிப்பாக Postman, Mail Guard, Multi Tasking Staff உள்ளிட்ட குரூப் ‘சி’ பணியிடங்களுக்கும், கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய அஞ்சல் துறை கடந்த நவம்பர் 15ஆம் தேதி போஸ்ட்மேன் மற்றும் மெயில்கார்டு பதவிகளுக்கான வரைவு ஆட்சேர்ப்பு விதிமுறைகளை (draft Recruitment Rules) வெளியிட்டது. இதில், பெயர், பணியிடம், பணியின் வகைப்பாடு, ஊதிய விகிதம், பணி நிபந்தனை காலம், கல்வித் தகுதி முதலான நிலைகளில் பின்பற்ற வேண்டிய பொறுப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வரைவு ஆட்சேர்ப்பு விதிமுறைகள் குறித்து 30 (அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்குள்) நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அனைத்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, PostMan, Mail Gaurd பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.