காரில் ஏசி போட்டு தூங்குவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டை சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் காரில் ஏசி போட்டு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல கடந்த 2019இல் சென்னையில் கார் ஓட்டுநர் ஒருவர் ஏசியை போட்டுவிட்டு தூங்கிய போது உயிரிழந்தார். ஏசி வழியாக காருக்குள் நுழைந்த கார்பன் மோனாக்சைடை தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தெரியாமல் சுவாசித்ததால், உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இயந்திரம் வெளியேற்றும் புகையில் முக்கியமாக இருப்பது கார்பன் மோனாக்சைட். மூடி இருக்கும் இடங்களில் கார்பன் மோனாக்சைட் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை கார்பன் மோனாக்சைட் மாற்றியமைக்கும். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சென்னையில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை மையத்தை நடத்தி வரும் ஆலோசகர் ஸ்ரீதரன் இதுபோன்ற மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஒருவர் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு சுவாசிக்கும்போது அது விரைவில் மரணத்திற்கான சூழலை உருவாக்கும். அதற்கு காரணம் ரத்த அணுக்கள் கார்பன் மோனாக்சைடால் அதிக அளவு ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. உடலில் இருக்கும் உயிர் அணுக்கள் அனைத்தும் செயல்படுவதற்கு ஆக்சிஜன் அத்தியாவசியமான ஒன்று. நாம் கார்பன் மோனாக்சைடு சுவாசித்தால் ஹீமோகுளோபின் இருக்கும் ஆக்சிஜன் ஹார்பாக்ஸ்கிலோவின் ஆக மாறிவிடும். இது உடலில் உள்ள செல்களை பயனற்றதாக மாற்றி உடலின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்கும் நபர் தலைசுற்றல், தலை வலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்.
அதுமட்டுமன்றி, மரணத்தையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரில் ஏசி போட்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தால் உடனடியாக காரை விட்டு வெளியே வந்து மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால், போதையில் இருந்தால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அப்போது அவர்கள் அமைதியான மரணத்தை பெறுவார்கள். வாயுக்கள், புகைத்தல் போன்றவற்றின் மனத்தினை நம்மால் உணர முடியும். ஆனால், கார்பன் மோனாக்சைடு எந்த மனமும் கிடையாது. மூடப்பட்டிருக்கும் இடத்தில் எந்த அளவிற்கு கார்பன் மோனாக்சைட் நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அதுமட்டுமன்றி ஏசி முறையாக பராமரிக்கவில்லை என்றாலும் உயிர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரில் ஏசி போட்டு பயணித்தால் ஜன்னல்கள் திறந்து வைக்க வேண்டும் என்றும் வெகு தொலைவு பயணம் மேற்கொள்ள இருந்தால் ஏசியின் அமைப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது முடிந்த வரை காரில் தூங்குவதை விட உணவகங்களில் அல்லது தங்கும் விடுதிகளில் உறங்குவது பாதுகாப்பானது” என்று தெரிவித்தார்.