கோடைகால சீசனில் மாம்பழ விற்பனை களைகட்டி வருகிறது. மக்களின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய மாங்காய்களை கூடிய விரைவில் பழுக்க வைத்து உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் நினைக்கின்றனர். இதனால், ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவான விளைவுகள் :
ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான பலகீன உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சிலருக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மாம்பழத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடலில் சேரும்போது சருமத்தில் புண் உண்டாகும். உணவை விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்படலாம்.
நரம்பு பிரச்சனை :
ரசாயன மாம்பழங்களால் ஏற்பட கூடிய நேரடியான பின் விளைவுகள் மட்டுமன்றி இருமல், மூச்சு சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரசாயன மாம்பழங்களால் நம் திசுக்களுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் சப்ளை நடக்காது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கும். இதனால் நரம்புகளில் பிரச்சனை ஏற்பட்டு கால்களில் உணர்வின்மை ஏற்படும்.
என்னென்ன ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது..?
இயற்கையாக மாங்காய்களை பழுக்க வைத்தால் நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறது என்பதாலேயே ரசாயனங்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். கால்சியம் கார்பைடு, எதீபோன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தினால் மாங்காய்கள் துரிதமாக பழுத்து விடும். அதேபோல ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
எப்படி கண்டறிவது..?
மாம்பழம் எந்த நிறத்தில் இருந்தாலும் இயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் அதன் நிறம் மங்கலாக இருக்கும். ஆனால், செயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் கண்ணை பறிக்கும் வகையில் நிறம் இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் மணம் வீசும் மற்றும் அதன் சுவை அலாதியாக இருக்கும். ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் எந்தவித மணமும் வீசாது, சுவையும் இருக்காது. சீசன் இல்லாத காலங்களில் மாம்பழங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பழங்களை கையில் எடுத்து பார்கின்ற போது கனிந்த தோற்றம் ஏற்படாமல் தடிமனான வகையில் கல் போன்று இருக்கும் பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம். அக்கம் பக்கத்து வீடுகள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களின் வீடுகளில் விளைந்த மாங்காய்களை நேரடியாக விலைக்கு வாங்கி அவற்றை வீட்டிலேயே பழுக்க வைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது.