நம் முன்னோர்கள் மண் பானைகள், தாமிரம், பித்தளை பொருட்களால் ஆன பாத்திரங்களில் சமைத்து வந்தனர். ஆனால், தற்போது என்னென்ன பொருட்களை வைத்து சமைக்கப்போகிறேன் என்பதில் காட்டும் கவனத்தை, எந்த பாத்திரத்தில் சமைக்கப்போகிறோம்? அது ஆரோக்கியமானதா? என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எனவே, அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களில் எது சிறந்தது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு சமையல் பாத்திரங்களுக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. சில பாத்திரங்கள் சில சமையல்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் சமைக்கும் உணவுக்கு மிகவும் பொருத்தமான பாத்திரங்களை தேர்வு செய்வது கட்டாயமாகும். டெஃப்ளான், துருப்பிடிக்காத எஃகு மற்றும் பீங்கான் ஆகிய மூன்றில் சரியான மற்றும் ஆரோக்கியமான சமையல் பாத்திரங்கள் எவை என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
டெஃப்ளான் பாத்திரங்கள் அல்லது நான் ஸ்டிக் பாத்திரங்கள் :
நன்மைகள் : டெஃப்ளான் என்பது ஒரு செயற்கை ரசாயனமாகும். இது பாத்திரத்தின் மேற்பரப்பில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்தினால், பாத்திரங்களில் உணவு ஒட்டிக்கொள்ளாது. மேலும், உணவில் எண்ணெய் உபயோகத்தின் அளவைக் குறைக்கவும், பாத்திரங்களை கழுவும் நேரத்தை குறைக்கவும் உதவுகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற சமையல் பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் டெஃப்ளான் மலிவானது.
தீமைகள் : டெஃப்ளான் மிகவும் பயனுள்ள பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தது மற்றும் நச்சுகளை வெளியிடுவதாக அறியப்படுகிறது. அதிக வெப்பத்தில், சமையல் பாத்திரங்களின் பூச்சு உடைந்து நச்சு இரசாயனங்களை காற்றில் வெளியிடத் தொடங்குகிறது. இந்த ரசாயனங்கள் உணவில் கலந்திருப்பது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவர்சில்வர் பாத்திரங்கள் :
நன்மை: இந்த பாத்திரங்கள் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள். ஒவ்வொரு வீட்டிலும் பிரதானமானவை. துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. இந்த பாத்திரம் எந்த வகையான உணவுகளையும் சமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது. மிகவும் நீடித்து உழைக்க கூடியது மற்றும் சுத்தம் செய்ய எளிதானது. பாத்திரத்தில் எந்த பூச்சும் இல்லாததால் நச்சுத்தன்மையற்றது மற்றும் அதிக வெப்பத்தில் எளிதாக சமைக்க முடியும்.
தீமைகள் : பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பத்தில் சமைக்க பாதுகாப்பானவை அல்ல. இந்தப் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க எண்ணெய்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவை அதிகம் தேவைப்படுகிறது. மிதமான தீயில் சமைக்க கூடிய உணவு வகைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைக்க முடியாது.
செராமிக் பாத்திரங்கள் :
நன்மை : பீங்கான் பாத்திரங்கள் PTFE மற்றும் PFOA போன்ற ரசாயனங்கள் இல்லாதது. கீறல் ஏற்படாது என்பதால் இது பயன்படுத்த எளிதானது. பீங்கான் பாத்திரங்கள் உலோகங்கள் அல்லது நச்சு இரசாயனங்கள் ஆகியவையின்றி, பாதுகாப்பான சுகாதாரமான கனிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பீங்கான் சமையல் பாத்திரங்கள் மெதுவாக வெப்பமடைகின்றன. ஆனால் வெப்பத்தை நன்கு தக்கவைத்து, உங்கள் பாத்திரத்தின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன.
தீமைகள் : பீங்கான் பூச்சு நீடித்தது அல்ல. அது காலப்போக்கில் விரிசல் மற்றும் தேய்ந்துவிடும். பீங்கான் சமையல் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் துகள்கள் சிறிய கனிமத் துகள்களால் ஆனவை. இதனால் உணவு சமைக்கும் மேற்பரப்புடன் முழுமையாக தொடர்பு கொள்வதைத் தடுக்கிறது. பீங்கான் சமையல் பாத்திரங்கள் மிகவும் மென்மையானவை. இதை கவனமாக கையாள வேண்டும்.