மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், சேமிப்புகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதிலும், குறிப்பாக தபால் துறையில் செயல்படும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு வைப்புத் தொகையை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 வரை அதிகரித்துள்ளன. தனி நபர் கணக்கிற்கு ரூ.9 லட்சம் வரையும், கூட்டு கணக்கிற்கு ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரையும் அதிகபட்ச தொகையாகச் சேமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கணக்கில் உள்ள தொகைக்கு 7.1 % வட்டி மாத முறையில் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.
புதிய கணக்கை எப்படி தொடங்குவது..?
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தபால் அலுவலகத்திலேயே இந்த கணக்கைத் தொடங்கலாம். முதலில் ரூ.1000 இருப்புத் தொகையாகச் செலுத்தி கணக்கைத் தொடங்க வேண்டும். கூட்டுக் கணக்கு தொடங்க விரும்பினால் 2 பேர் பங்குக்குச் சேர்த்து இருப்புத் தொகை செலுத்த வேண்டும். இதற்கு மாத வட்டியாக 7.1% வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பட்ஜெட் தகவலின் படி, தனி நபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக 3 நபர்கள் வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கை 10 வயது நிரம்பிய குழந்தைகள் பெயர்களிலும் தொடங்கலாம் என்றும் அதற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பாளர் பெயரில் தொடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.