நாம் முன்பெல்லாம் டிவியை ஆயுத பூஜைக்கு தண்ணீர் தெளித்துதான் துடைப்போம் அதையே நாம் ஸ்மார்ட் டி.விக்கும் பின்பற்றக்கூடாது என எச்சரிக்கின்றது இந்த பதிவு…
உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியை நீங்கள் தினமும் துடைத்தாலும் சரி.. அல்லது மாதத்திற்கு ஒருமுறை துடைத்தாலும் சரி.. அவ்வளவு ஏன்? “வருஷா வருஷம் ஆயுத பூஜை வந்தால் தான் டிவி துடைக்குற நினைப்பே வரும்!” என்கிற ஆளாக இருந்தாலும் சரி.. உங்கள் கையாலேயே உங்கள் Smart TV ஸ்க்ரீனின் கதையை முடிக்கும் 7 தவறுகளை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்!
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/TV.jpeg)
துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பலருக்கும் “சரியான முறையில்” ஒரு டிவியை சுத்தம் செய்ய தெரியவில்லை! உண்மை என்னவென்றால்.. கொஞ்சம் தண்ணீர் எடுத்து.. அதை டிவி ஸ்க்ரீனின் மீது தெளித்து.. ஒரு துணியோ அல்லது ஒரு துண்டோ எடுத்து.. சரக் புரக்கென்று துடைப்பதையே நாம் வழக்கமாக கொண்டுள்ளோம்!
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/How-to-Clean-a-TV-Screen-770x462-1.jpg)
ஒரு ஸ்மார்ட் டிவியின் ஸ்க்ரீனை மிகவும் அசலாட் ஆக துடைப்பது எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் வாருங்கள்.. டிவி ஸ்க்ரீனை எப்படி எல்லாம் சுத்தம் செய்ய கூடாது? எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்!
உங்கள் ஸ்மார்ட் டிவியை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முன், டிவியை மறக்காமல் ஆப் செய்து விடவும். இதன் மூலம் மின் விபத்துக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக நீங்கும். அதுமட்டுமின்றி டிவியை ஆப் செய்தால் தான், டிவியின் பிளாக் ஸ்க்ரீன் ஆனது எவ்வளவு அழுக்காக உள்ளது, அதில் எவ்வளவு தூசி உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். எனவே டிவி ஓடிக்கொண்டிருக்கும் போதே அதை சுத்தம் செய்வதை தவிர்க்கவும்!
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Banner-Tv-Cleaning-1024x418.jpg)
எந்த துணியை பயன்படுத்த வேண்டும்? உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய சரியான “துணியை” பயன்படுத்துவது மிகவும் முக்கியம். முகம் துடைக்கும் துண்டுகள், நியூஸ் பேப்பர், காட்டன் துணிகள் அல்லது பாலிஸ்டர் துணிகளை கொண்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால்.. அதை இன்றோடு கைவிடவும். ஏனென்றால் “அவைகள்” உங்கள் டிவி ஸ்க்ரீனில் கீறல்களை ஏற்படுத்தலாம்.
துடைப்பதற்கு ஏற்ற துணி எது? எனவே, உங்கள் வீட்டில் இருப்பது ஒரு எல்சிடி, ஓஎல்இடி, பிளாஸ்மா அல்லது சிஆர்டி டிஸ்ப்ளேவை கொண்ட ஸ்மார்ட் டிவியாக இருந்தால் அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் அல்லது ஃபிளானல் துணியை பயன்படுத்துவது தான் நல்லது. எல்லாமே துணி தானே என்று கண்மூடித்தனமாக டிவியை துடைத்து, அதன் ஸ்க்ரீனில் 1008 கோடுகளை போட்டு விடாதீர்கள் – ஜாக்கிரதை!
உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது ஏதேனும் ஒரு ஸ்கிரீன் கிளீனரைப் பயன்படுத்தவும். ஆயிரக்கணக்கில் பணம் செய்து நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டிவியை ஸ்க்ரீனை “நல்லபடியாக” துடைக்க சில நூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்க்ரீன் கிளீனர் வாங்குவதில் எந்த தவறும் இல்லை! ஏனென்றால், நம்மில் சிலர் டிவி ஸ்க்ரீனை திரையை சுத்தம் செய்ய சோப்பு தண்ணீர் மற்றும் சானிடைசரை பயன்படுத்துகிறோம். அது முற்றிலும் தவறான ஒரு செயல்முறை ஆகும்!
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/6Z7K964Y-everyday-home-lcd-display-screen-cleaner.jpg)
எதுவாக இருந்தாலும் நேரடியாக தெளிக்க கூடாது! நீங்கள் ஒரு நல்ல ஸ்க்ரீன் க்ளீனரை பயன்படுத்தினாலும் சரி அல்லது தண்ணீரை கொண்டு டிவி ஸ்க்ரீனை துடைத்தாலும் சரி.. எந்தவொரு திரவத்தையுமே நேரடியாக டிவி ஸ்க்ரீனின் மீது தெளிக்க வேண்டாம். முதலில் மைக்ரோஃபைபர் துணியை எடுத்து, அதில் ஒரு சில துளிகள் “க்ளீனிங் சொல்யூஷனை” ஊற்றி, அதை கொண்டே டிவி ஸ்க்ரீனை துடைக்க வேண்டும்.
நிரந்தரமான கறைகள் ஏற்படும்.. அலெர்ட்! ஏனென்றால் டிஸ்ப்ளே பேனலில் நேரடியாக ஒரு சொல்யூஷனை தெளித்தால், அது ஸ்க்ரீனில் சில நிரந்தரமான கறைகளை ஏற்படுத்தலாம். அதே சமயம், மிகவும் விலை உயர்வான க்ளீனிங் சொல்யூஷனை பயன்படுத்தினாலும் கூட, மிகவும் மெதுவான முறையிலேயே டிவி ஸ்க்ரீனை துடைக்க வேண்டும்.”அழுக்கு போக வேண்டுமா?” என்று கூறி வேக வேகமான துடைக்க வேண்டாம்; துடைக்கவும் கூடாது!
துடைத்த பிறகு.. ஒரு டிவி ஸ்க்ரீனை துடைப்பதற்கு முன் மற்றும் துடைக்கும் போது மட்டுமல்ல.. துடைத்த பிறகும் கூட நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை உள்ளது. அது என்னவென்றால் டிவி ஸ்க்ரீனை துடைத்த பிறகு, அதை நன்றாக உலர விட வேண்டும். அதை சரியாக காயவிடாத பட்சத்தில், ஒரு சில ஈரமான புள்ளிகள் மீண்டும் ஒரு கறையாக மாறிவிடும். பிறகு நீங்கள் டிவியின் ஸ்க்ரீனை துடைத்ததற்கு புண்ணியமே இல்லமால் போய் விடும்.
எக்ஸ் போடுவது… வட்டம் போடுவது – கூடாது! டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரே திசையை நோக்கி சுத்தம் செய்யவும். அதாவது செங்குத்தாக தேய்த்து சுத்தம் செய்யுங்கள் அல்லது கிடைமட்டமாக தேய்த்து சுத்தம் செய்யவும். பிறகு முதலில் சுத்தம் செய்த திசைக்கு எதிர் திசையில் சுத்தம் செய்வதையும் மறக்க வேண்டாம். மாறாக, டிவி ஸ்க்ரீனில் எக்ஸ் வடிவத்தில் தேய்த்து சுத்தம் செய்வது அல்லது வட்டம் போடுவது போல தேய்த்து சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால், சீரான கோணத்தில் தேய்க்கவில்லை என்றால், அது சுத்தம் செய்வது போலவே இருக்காது!
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/how-to-clean-tv-01-1646859499-1024x576.jpg)
கடைசி டிப்ஸ் அதே சமயம் முக்கியமான டிப்ஸ்! டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அந்த துணியில் ஏற்கனவே அழுக்கு மற்றும் தூசிகள் இருக்கும். அதே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் டிவி ஸ்க்ரீனில் கீறல்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படலாம். எனவே அவ்வப்போது டிவி துடைக்கும் துணியை மாற்றுவது நல்லது.