வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக திறன் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக ACCOUNTS ASSITANTS (கணக்கு நிர்வாகி) திறன் பயிற்சியை அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சிக்கு 21 வயது முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. BA, B.com, BSc Maths என ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து சென்னையில் 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்க வசதி ஆகும் மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தேர்வுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு (BFSI) ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Account Executive) பணியில் சேர 100% வழிவகை செய்யப்படும். இப்பணியில் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பெறலாம். இந்த பயிற்சியினை https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.