உலகளவில் இதய நோயினால் இறக்கக் கூடியவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயினால் இறப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது, இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் அதிக விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் ஒரு முக்கியமான காரணி உங்கள் உணவுமுறைதான். ஆரோக்கியமான உணவுமுறையானது அதிக கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துக் காரணிகளிலிருந்து உங்களை விலக்கி வைக்கும். எனவே, இந்த பதிவில் இதய நோயை தடுக்கும், உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
— உங்கள் உணவில் வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா போன்றவற்றை சேர்த்து கொள்வதற்கு பதிலாக முழு தானியங்களை சேர்க்கலாம். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். ஏனென்றால், முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும், இது கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
— ஆளி விதைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் ஒரு டீஸ்பூன் அளவு ஆளிவிதைகளை உட்கொண்டால், உங்கள் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். அத்துடன் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைக்கும். அமெரிக்காவில் உள்ள தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு 4 டீஸ்பூன் ஆளி விதைகள் எடுத்து கொண்டால், உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரைகளின்படி, ஆளிவிதைகளில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் இதய நோய் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் என்று கூறியுள்ளனர்.
— நட்ஸ்களில் நிறைவுறா கொழுப்புகள் அதிகம் உள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளன. எனவே, இது உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நட்ஸ்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உங்கள் ரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது. உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு பாதாம், வேர்க்கடலை, அக்ரூட், ஹேசல்நட்ஸ் மற்றும் பெக்கன் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
— டோஃபு, டெம்பே, எடமேம் மற்றும் சோயா பால் போன்ற சோயா சார்ந்த உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை கொழுப்பைக் குறைக்கும். இவற்றில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இறைச்சி, முழு கொழுப்பு கிரீம் மற்றும் பால் பொருட்கள் போன்ற நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகளுக்கு பதில் சோயா பொருட்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
— பீட்ரூட் ஜுஸ்ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நைட்ரேட் (NO3) நிறைந்துள்ளதால், இது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின்படி, தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால், கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும்.