20 வருடம் Home Loan எடுத்தவர்கள் 24 வருடம் ஏன் EMI செலுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் கனவு என்றால் சொந்த வீடு தான். இந்த சொந்த வீட்டை அடைய சில ஆண்டுகள் முன் வரை பணத்திற்காகவும், பெரும் சேமிப்பு தொகைக்காகவும், வெளிநாட்டில் இருந்து அப்பா, அண்ணன் போன்றோர் அனுப்பும் பணத்தை வைத்து சொந்து வீடு வாங்கவோ, கட்டவோ வேண்டும். ஆனால், இப்போது வீட்டுக் கடன் என்பது அனைத்து தரப்பினருக்கும், அனைத்து வருமான அளவுகள் கொண்டவருக்கும் கிடைக்கும் காரணத்தால் நீண்ட காலம் சொந்த வீடு வாங்கக் காத்திருக்கும் நிலை மாறியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் கடந்த 4 ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருந்ததாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி, சலுகைகளை அளித்து வந்ததாலும் விற்பனை சூடுபிடித்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ விகிதம் காரணமாக வீட்டு கடன் வட்டி விகிதம் அனைத்து வங்கிகளிலும் அதிகரித்து வருகிறது. இதனால் 2-3 வருடத்திற்கு முன்பு 20 வருடம் ஹோம் லோன் வாங்கியவர்களுக்குத் தற்போது கடனுக்கான காலம் 24 வருடமாக உயர்ந்துள்ளது. இதேபோல் சிலருக்கு ஹோம் லோன் ஈஎம்ஐ தொகை அதிகரித்தும் உள்ளது. எதனால் இந்த மாற்றம்..? யாருக்கெல்லாம் கடனுக்கான காலம் அதிகரித்துள்ளது..? யாருக்கெல்லாம் கடனுக்கான EMI அதிகரித்துள்ளது..? இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையில் 4%-இல் இருந்து 5.9% ஆக உயர்த்தியுள்ளது. அதேசமயம், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதம் வரை உயர இருக்கிறது. இதனால், 20 ஆண்டு ஹோம் லோனுக்கு ஈஎம்ஐ தொகை 7,574 ரூபாயில் இருந்து 8,741 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வட்டி உயர்வு வாடிக்கையாளர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, கடனுக்கான ஈஎம்ஐ தொகையை அதிகரிக்காமல் கடனுக்கான காலத்தை வட்டி உயர்வுக்கு ஏற்ப 21 முதல் 25 வருடம் வரை வங்கிகள் அதிகரித்துள்ளன. இது கிரெடிட் ஸ்கோர், ஈஎம்ஐ தொகை, கடன் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறும்.
இதுவே கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ, வீட்டுக் கடனுக்கான காலம் 25 வருடம் முதல் 30 வருடமாக இருந்தாலோ உங்களது ஈஎம்ஐ தொகை அதிகரித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த நிலையில், ஈஎம்ஐ சுமையைக் குறைக்க அசல் தொகையைக் குறைப்பதன் மூலம் சரி செய்ய முடியும்.