சேலம் மாவட்டத்தில் நாளை 40,000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை சீராக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகமும், தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உட்பட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுடன் காத்துக்கிடக்கின்றன. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற இருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களும், வேலைநாட்டவர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.