நம் முன்னோர்கள் பல்வேறு இயற்கை மருத்துவத்தை கண்டறிந்து அதை உணவில் சேர்த்து பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்து வந்தனர். தற்போது வளர்ந்து வரும் மேலைநாட்டு கலாச்சாரத்தை சிலர் வெறுத்தாலும் அந்த கால இயற்கை உணவுகளை எப்படி செய்வது என தெரியாமல் இன்றைய உணவு முறையை வேறு வழியின்றி கடைப்பிடிக்கின்றனர். ஆனால், இப்போது முடக்கத்தான் கீரையை வைத்து எப்படியெல்லாம் உணவு வகைகள் செய்யலாம் என பார்க்கலாம்.
கை, கால்களை முடக்கி விடும் நோய்களை தடுப்பதற்கு பயன்படும் கீரையை தான் முடக்கு அற்றான் கீரை என பெயர் சொல்லி அழைத்தனர். அது பின்னாளில் முடக்கத்தான் என மாற்றியுள்ளது. இந்த கீரையை மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால் மூட்டு வலிகள் வராமல் தடுக்கலாம். கீழ் பிடிப்பு, கீழ் வாதம், நடக்க முடியாமல் இருப்பது, கை கால்களை நீட்டி மடக்க முடியாமல் இருப்பது போன்ற மூட்டு சம்பந்தமான அனைத்து நோய்களையும் விரட்டும் வல்லமை கொண்டது தான் இந்த முடக்கத்தான் கீரை. இதன் பச்சை கீரை கசப்பு தன்மை உடையது. ஆனால், உணவில் கலந்து சாப்பிட்டால் கசப்பு அந்த அளவிற்கு தெரியாது.
முடக்கத்தான் தோசை
இரண்டு கப் புழுங்கல் அரிசியுடன் இரு கைப்பிடி கீரையை சேர்த்து நன்கு அரைத்து தேவையான அளவு உப்பு கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம். அல்லது கீரையை தனியே எடுத்து மிக்ஸியில் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை ஊற்றலாம். சற்று மருந்து வாசனை வரும் என்றாலும் காரமான சட்னி வைத்து சாப்பிடலாம்.
முடக்கத்தான் சட்னி
முடக்கத்தான் இலையை நெய்யில் வதக்கி இஞ்சி, கொத்தமல்லி, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சட்டினி அல்லது துவையலாக சாப்பிடலாம்.
முடக்கத்தான் சூப்
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து அதை ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து முக்கால் கப் ஆக்கி சிறிது உப்பு மிளகு பொடி போட்டு சூப்பாக குடிக்கலாம். இதனை தொடர்ந்து டீ, காபிக்கு பதிலாக சாப்பிட்டு வருவதால் முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்றவை நம்மை நெருங்காது.
நாட்டில் 65 சதவீத மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 85 சதவீதம் பெண்கள் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. முடக்கத்தான் கீரையை எண்ணெய் விட்டு காய்ச்சி மூட்டு வலி இருப்பவர்கள் வலி உணரும் இடத்தில் தேய்த்து வந்தாலும் மூட்டு வலி விரைவில் குணமடையும்.