புதியதாக கடன் வழங்கும் நிறுவனங்களிலும் வங்கிகளிலும் தனி நபருக்கு கடன் வழங்க தேவையான கிரெடிட் ஸ்கோர் பற்றிய விவரங்களை இனி வாட்ஸ் ஆப்பில் பெற முடியும்.
கடன் வழங்கும் நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் தனி நபர் கடன் வழங்க கேட்கப்படும் மிக முக்கியமானது கிரெடிட் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண்களை கொண்டுள்ளது. இந்த கிரெடி ஸ்கோர் பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். ஆனால், இதனை சரி பார்ப்பது சிக்கலான விஷயம். எனவே எளிமையான முறையில் பார்க்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரியன் என்ற நிறுவனம் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் கிரெடிட் பீரோ உரிமம் பெற்ற முதல் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை உடனடியாக சரிபார்த்து அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சரி செய்வதற்கு உதவி செய்கிறது. மேலும் இதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதையும் சுலபமாக கண்டறியலாம்.
இதன் மூலமாக தனிநபர் தனது கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். தற்போது ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை எளிமையான முறையில் உடனடியாக சரி பார்ப்பதற்கென இந்நிறுவனம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக இந்நிறுவனத்தின் மேலாளர் நீரஜ் தவான் கூறியதாவது, இந்தியாவில் 48 மில்லியன் கணக்கான மக்கள் whatsapp செயலியை உபயோகப்படுத்தி வருகின்றனர். அதனால் வாட்ஸ் அப் மூலமாக தங்களின் கிரெடிட் ஸ்கோர் உடனடியாக சரி பார்த்துக் கொள்ள வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.