தண்ணீரை சூடு படுத்தும் வாட்டர் கீட்டர் எனப்படும் கீசரில் இருந்து வெளியான நச்சு வாயு மூலம் பெண் ஒருவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் அனைத்து தேவைகளுக்கும் இயற்கைக்கு மாறாக இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்வில் மிக்சி இல்லாமல் சமையல் நடக்காது, வாஷிங் மிஷின் இல்லாமல் துணிகள் துவைக்க முடியாது மற்றும் குளிப்பதற்கு வெந்நீர் போட வாட்டர் கீட்டர்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில், கேஸ் கீசர்கள் என்ற எல்ஜிபி வாயு மூலம் தண்ணீர் சூடுபடுத்தப்படுகிறது. தண்ணீர் வேகமாக சூடாவது மட்டுமின்றி தொடர்ச்சியாக சூடான தண்ணீர் கிடைக்கும் வகையில் செயல்படும் என்பதால் இந்த கீசர் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. தொழில்நுட்பங்களில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதேபோன்று அதில் ஆபத்தும் அதிகம் உள்ளதை நாம் மறக்கக்கூடாது. அந்தவகையில் வாட்டர் கீசர் ஏற்படுத்திய ஆபத்து குறித்து திவ்யான்ஷு அசோபா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், குளிக்க சென்ற தனது மனைவி வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை என்றும் பின்பு குளியலறைக்கு சென்று பார்த்தப்போது, சுயநினைவை இழந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்பிஜி வாயுவை பயன்படுத்தி சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை கொண்டு தண்ணீரை சூடு படுத்தும் கேஸ் கீசர்கள் வெளியிட்ட நச்சு வாயுவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். எனவே, வாட்டர் கீசர்களை வெளிப்புறத்தில் காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பயன்படுத்துவது நல்லது என்பதே மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.