மழைக்காலம் வந்துவிட்டது. பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தச் சூழலில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை…
* முதல் நாள் – மாத்திரை மட்டும் கொண்டு காய்ச்சலை சரி செய்யலாம் / குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஓய்வு முக்கியம்.
* இரண்டாவது நாள் காய்ச்சல் இருப்பின் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். மருந்து கடைகளில் செட் மாத்திரை வாங்க கூடாது.
* மூன்றாவது நாள் வரை கடும் காய்ச்சல் அடித்து, சட்டென உடல் குளிர்ந்தால் உடனே மருத்துவமனைகளை நாட வேண்டும்.
* மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறச் சொன்னால், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
* காய்ச்சல் வந்தால் தினமும் போதுமான அளவு நீரை பருக வேண்டும். ஓ.ஆர்.எஸ் உப்புக்கரைசல் நீரை பருகுவது நல்லது. உணவை கஞ்சியாக குடிப்பது நல்லது.
* சிறுநீர் கழிப்பது 6 மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் நிகழ வேண்டும். அதில், குறைபாடு இருப்பின் உடனே உள்நோயாளியாக சேர வேண்டும்.
* மலத்தில் ரத்தம் வெளியேறுதல் / மலம் கருப்பாக செல்லுதல், வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகளை கண்டறிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்
* கடும் ஜுரம் அடிக்கும் வேலையிலும், காய்ச்சல் விட்ட மூன்று நாட்களும் ஓய்வு கட்டாயம் தேவை.
காய்ச்சல் வந்தால் செய்யக்கூடாதவை…
* மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி உண்பது கூடாது .
* போலி மருத்துவர்களிடமோ, மருந்தகங்களிலோ சென்று ஊசி போட்டுக் கொள்வது மகா பாதகச் செயலாய் அமைய வாய்ப்புள்ளது. போலி பரப்புரைகளை நம்பி சிகிச்சைகளை தாமதிக்கக் கூடாது.
* அரசு மற்றும் பிற மருத்துவமனைகளில் உள்நோயாளியாக தங்கியிருப்போர், மருத்துவர் அனுமதியின்றி முன்கூட்டியே மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வரக்கூடாது (டெங்கு காய்ச்சலில், ஜுரம் விட்ட அடுத்த 3 நாட்கள் தான் ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்க)
* கடும் ஜுரம் அடிக்கும் ஒருவர், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைச்சலை தவிர்க்க வேண்டும்.
* டெங்கு நோய் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தால் அந்த இடத்திற்கு இயன்றவரை பயணம் செல்வது கூடாது. குழந்தைகள், முதியோரை அங்கு அழைத்துச் செல்லக் கூடாது.
* உங்கள் ஊரில் டெங்கு பரவிக் கொண்டிருந்தாலோ, உங்கள் வீட்டில் யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் வந்திருந்தாலோ அடுத்த இரண்டு வாரம் நீங்களும் டெங்கு பரவாத பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.