IRCTC-இல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் மூலம் லட்சக்கணக்கில் இழப்பீடு பெறலாம்.
ரயில்வே பயணக் காப்பீட்டு எடுக்க பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, வெறும் 35 பைசா செலுத்தினால் போதும். இதன் மூலம் ஐஆர்சிடிசி (IRCTC) ரயிலில் பயணிப்போருக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ், பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின்போது மதிப்புமிக்க பொருட்களை இழந்தால், அதற்கு இழப்பீடு பெற முடியும்.
மேலும், விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை ரயில்வே ஏற்றுக் கொள்ளும். இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டாளரின் நாமினிக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலோ அவருக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
பலத்த காயம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், சிறிய காயம் என்றால், ரூ.10,000 வழங்கப்படும். ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்தக் காப்பீட்டைப் எடுப்பது மிகவும் சுலபம். ஆனால், இந்த இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் கிடையாது. பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, டிராவல் இன்சூரன்ஸ் வேண்டுமா..? என்று கேட்கப்படும் இடத்தில் ஆம் என்று தெரிவித்தால் போதும். இதன் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்துடன் 35 பைசா மட்டும் பயண காப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்படும்.
ரயில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரலாம். பயணிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது பயணிகள் நாமினியின் பெயரை நிரப்ப வேண்டும். அவ்வாறான நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதைக் கோருவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.