காலையில் நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கும் காபி தேவைப்படுகிறது. காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அதிக பிரியத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. நமது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.
எனினும், காபி குடிப்பதால் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. காபி அதிகமாக குடிப்பதால் பதட்டம், தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, வேகமான இதயத்துடிப்பு மற்றும் காபிக்கு அடிமையாதல் உணர்வு போன்ற பல பிரச்சனைகள் வருமாம். மேலும், வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, ஒருவேளை நீங்கள் காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விடலாம் என முடிவு செய்தால் உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலி, தூக்கமின்மை, குமட்டல், எரிச்சல் போன்றவை உண்டாகலாம். ஆனால், இதனுடன் உங்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கப் போகிறது. அவை என்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
தூக்கம் மேம்படும் :
காபி குடிப்பது உங்கள் மூளை மற்றும் நரம்பு அமைப்பின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது. இதனால், நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருப்பீர்கள். காபி குடித்த அடுத்த 6 மணி நேரத்திற்கு பிறகு கூட நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். எனவே, காபி குடிப்பதை தவிர்ப்பது உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
சருமத்திற்கு நல்லது :
காபியை அதிகமாக குடிப்பது வயதாகும் அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் கொலாஜன் உற்பத்தியை குறைக்கிறது. இதன் காரணமாக சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்றவை உண்டாகிறது. எனவே, உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமென்றால் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
வாய் ஆரோக்கியமாக இருக்கும் :
காபி குடிப்பது பற்களை கறைப்படுத்துவதில் தொடங்கி ஈறுகளையும் பாதிக்கிறது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் வாயில் வறட்சியையும், உமிழ் நீரில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களை எதிர்த்தும் போராடுகிறது. எனவே, வாய் எந்த அளவிற்கு வறண்டு இருக்கிறதோ அந்த அளவு பற்சிதைவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் எடை குறையும் :
காபியில் நாம் சேர்க்கக்கூடிய சர்க்கரை மற்றும் கிரீம் போன்றவற்றில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. காபியை தவிர்த்தால் உங்கள் உடல் எடையை சரியாக பராமரித்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களால் காபி குடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்றால் அதில் சர்க்கரை மற்றும் கிரீம் போன்றவற்றை சேர்க்காமல் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பை தடுக்க உதவும்.
இரத்த அழுத்தம் சீராகும் :
பொதுவாக காபி குடித்த பிறகு ரத்த அழுத்தத்தில் அதிகரிப்பு ஏற்படும். குறிப்பாக சொன்னால் ரத்த நாளங்களை விரிவுபடுத்தக்கூடிய ஹார்மோன்களை காஃபின் தடுக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, காபி குடிப்பதை தவிர்த்து விடும் பொழுது ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படும் :
காபி குடிப்பதை நீங்கள் நிறுத்தி விட்டால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுவதற்கு நீங்கள் உதவி புரிவீர்கள். ஏனெனில், காஃபினானது பி வைட்டமின்கள் உட்பட பல்வேறு விதமான வைட்டமின்கள் மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உறிஞ்சுதலில் தலையிடுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அதற்கு கிடைக்காமல் போகலாம். எனவே காபி குடிப்பதை தவிர்ப்பது இது போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும்.
Read More : மனித இனமே அழிந்துவிட்டால் பூமியை யார் ஆட்சி செய்வார் தெரியுமா..? இந்த 8 கால் உயிரினம் தானாம்..!!