தீபாவளி மாதம் என்றாலே மழையும் சாரலும் சேர்ந்தே வரும்… பட்டாசு வெடிக்கும் நேரம் மழை வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் விளையாட்டுகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வரும்.
அதுவும் காலநிலை மாற்றத்தால் சாரல் வரும் ஐப்பசி காலத்தில் அடை மழையே பொழிந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கி தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பொழிவதால் அந்த மலையில் தோன்றும் நதிகளில் எல்லாம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. தீபாவளி இந்த வருடம் திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என்று 3 நாட்கள் வரிசையாக விடுமுறை வருகிறது. சில பள்ளி-கல்லூரிகளுக்கு செவ்வாய் கிழமை அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்து, சொந்த வாகனம் என்று பயணித்துள்ளனர். இதனால் சென்னையின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வண்டிகளின் அணிவகுப்பு அலைமோதியது. இந்நிலையில், தொடர் விடுமுறை இருப்பதால் நகரங்களில் இருந்து கிராம பகுதிகளுக்கு வரும் மக்கள் அருகில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஓடைகளில் குதூகலமாக குளிப்பது வழக்கம்.

ஆனால், இம்முறை பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ஏரி மற்றும் அணைகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், எப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. அதீத மழையால் வெள்ளம், சுழல் போன்ற அபாயங்கள் இருப்பதால் மக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.