குழந்தை வளர்ப்பு என்பது அன்பால் மட்டுமல்ல, அதீத விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு கடமையாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பாரம்பரியம் என்ற பெயரில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் சில பழக்கங்கள், உண்மையில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்துக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் டாக்டர் பார்த்திபன், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான தவறுகளை பட்டியலிட்டுள்ளார்.
முதலாவதாக, குழந்தை பிறந்தவுடன் அதன் நாவில் சர்க்கரைத் தண்ணீர் அல்லது தேன் தடவும் சடங்கு முறையை மருத்துவர் மறுக்கிறார். தேனில் இருக்கும் சில நுண் கிருமிகள் குழந்தைகளின் மென்மையான உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல, தாய்ப்பால் போதாது என்று கருதி 6 மாதங்களுக்கு முன்பே குழந்தைகளுக்குத் தண்ணீர் குடிக்க தருவது அல்லது ஒரு வயதுக்கு முன்னரே பசும்பால் மற்றும் பால் பவுடர்களை தருவது முற்றிலும் தவறு. தாய்ப்பாலிலேயே 80 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து இருப்பதால், கோடை காலத்தில் கூட குழந்தைகளுக்குத் தனியாகத் தண்ணீர் வழங்க தேவையில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
இரண்டாவதாக, குழந்தை பால் கக்கினாலோ அல்லது வயிறு உப்பியது போல் தெரிந்தாலோ, உடனடியாக கிரேப் வாட்டர் (Gripe Water) கொடுக்கும் போக்கையும் மருத்துவர் கண்டிக்கிறார். இத்தகைய திரவங்கள் குழந்தையின் செரிமான மண்டலத்தை சிதைக்கக்கூடும். மேலும், கிராமப்புறங்களில் ‘பிள்ளை வளர்ப்பான்’ என்று போற்றப்படும் வசம்பை உரசி குழந்தைகளுக்கு கொடுப்பது மிக ஆபத்தானது. வசம்பில் உள்ள நச்சுத்தன்மை குழந்தையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதிக்கும் அபாயம் உள்ளதால், இத்தகைய கைவைத்தியங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
அறிவியல் ரீதியான அணுகுமுறையே குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடித்தளம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவொரு மருந்தையோ அல்லது உணவையோ பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்குவது விபரீதத்தில் முடியலாம். எனவே, பெரியவர்கள் கூறும் பாரம்பரிய முறைகளை அப்படியே பின்பற்றாமல், அவை இன்றைய மருத்துவச் சூழலுக்குப் பொருந்துமா என்பதை ஆராய்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். மென்மையான உடல் வாகு கொண்ட பச்சிளம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.
Read More : கொலஸ்ட்ரால் என்றால் பயமா..? 80 வயதிலும் இதயம் இளமையாக இருக்க இந்த மாற்றங்களை செய்யுங்க..!!



