தமிழ்நாட்டின் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா “ வரலாற்று சிறப்புமிக்க இந்த செயற்குழுவில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்த முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. ஓரணியில் திரள்வோம் என்று வீடு வீடாக முதலமைச்சர் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் சிவகங்கையில் தந்தை இல்லாமல், தாயின் வளர்ப்பில் வளர்ந்த ஒரு இளைஞர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை.. இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஒரு கோயிலில் ஒரு காவலாளியாக ஒரு அம்மாவுக்கு மகனாக வாழ்ந்து வந்த இளைஞர் இந்த அரசால் துடிதுடிக்க கொல்லப்பட்ட இந்த நேரத்தில், அப்பா என்ற போலி பிரச்சாரத்தை உருவாக்கி உள்ள முதல்வர் அவரின் வீட்டிற்கு செல்லவில்லை.. ஒரே தலைவர் தாயின் கண்ணீருக்கு வீட்டிற்கு சென்றார்..
சட்டம் ஒழுங்கின் சீர்குலைவு மூலம் எத்தனை இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவலமான நிலையில் இந்த தீர்மானத்தை வாசிக்கிறேன்.. காவல்துறை விசாரணையில் தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும், அதனை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்..
தற்போதைய மக்கள் விரோத திமுக ஆட்சியில், காவல்நிலையத்தில் பலர் மரணமடைவதை பார்க்கும் போது, அதிகார திமிர் கொண்ட ஆட்சியாளர்களின் மெத்தன போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெளிவாகிறது. சிவகங்கை, திருப்புவனம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் நேர்மையற்ற முறையில் சாரி கேட்கிறார்.. கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த 24 பேருக்கும் இவர் சாரி கேட்டாரா?
இவரின் பொறுப்பற்ற, நிர்வாக திறமையற்ற நிர்வாகத்திற்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.. தனக்கு கீழ் இயங்கும் காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைக்கு வழக்கை மாற்றுகிறாரே.. இது பெருத்த அவமானம் இல்லையா? திமுக பேசி வரும் மாநில சுயாட்சி முழக்கம் எங்கே போனது?
மாநில சுயாட்சியையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாத அமைச்சர் மக்களை படுகுழியில் தள்ளி வருகிறார். இதற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. மக்களை பாதுகாக்க திறனற்று, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர், தமிழ்நாட்டின் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்று பொது மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.. உள்துறை அமைச்சராக நீங்கள் நீடிக்க என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார்.