அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து வர்ஜீனியா நோக்கிச் செல்லவிருந்த விமானம் ஒன்றில், 27 வயதான தாஜ் மாலிக் டெய்லர் என்ற பயணி, தன்னுடன் பயணித்த ஒரு நபரிடம், “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட பயணி அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
எல்லா பயணிகளும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் முழு சோதனையும் நடத்தினர். முழு விமானத்தையும் ஆய்வு செய்த பின், அந்த லேப்டாப் உள்ளிட்ட எந்த பொருளிலும் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபர் தாஜ் மாலிக் டெய்லர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து FBI அதிகாரிகள் தாஜ் மாலிக் டெய்லரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விமானம் புறப்படும் நேரத்தில் இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிலையில், தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள் ரத்தும், ஒரு சில விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.
ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு விளையாட்டாகவோ, வேறு உள்நோக்கத்துடனோ வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், பயணிகள் சிரமம் அடைவது மட்டுமல்லாமல், ஒரு விமான நிறுவனம் பல கோடி இழப்புகளை சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.