சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் இருவரும் எங்கள் கட்சி பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கு இருக்கிறதோ, அங்கே அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வருவார்கள். பிப்ரவரி மாதத்தில் இந்த முக்கிய இணைப்பு நடக்கும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று சவால்விடும் தொனியில் கூறியுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த இணைப்பு ஒரு ‘டீசர்’ மட்டுமே என்றும், ‘மெயின் பிக்சர்’ இனிமேல்தான் வெளிவரப்போகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதாவது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர், சென்னையைச் சேர்ந்த ஒருவர், டெல்டா (காவிரி படுகை) பகுதியைச் சேர்ந்த இருவர் என, மேலும் 4 மூத்த தலைவர்கள் விரைவில் தவெக-வுக்கு தாவ வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இதில் செங்கோட்டையனே அந்தத் தலைவர்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், செங்கோட்டையன் அதிமுகவின் முக்கியப் ‘பாகங்களை’ ஒவ்வொன்றாக அகற்றித் தவெக-வில் கொண்டு சேர்க்கப்போகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, டெல்டா மண்டலத்தை சேர்ந்த, தற்போது எந்த அரசியல் பதவியிலும் இல்லாத ஒரு மூத்த தலைவர் விரைவில் தவெக-வில் இணையவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு, சமீபத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் அரசியல் வியூக நிபுணர்கள் மற்றும் வணிக இடைத்தரகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தையில், அதிகாரப் பகிர்வு, தேர்தல் வியூகங்கள் மற்றும் தவெக-வின் நீண்டகால இலக்குகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்தத் தலைவர்களின் வருகை, தவெக ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Read More : மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!



