சபரிமலை ஐயப்பன் யாத்திரை செல்வதற்கு என்று சில பாரம்பரியமான மற்றும் புனிதமான வழிமுறைகள் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து, முறையாக விரதம் மேற்கொண்டு யாத்திரையை நிறைவு செய்தால்தான், அந்தப் பயணத்தின் முழுப் பலனும் ஐயப்ப பக்தர்களுக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பினும், ஆரம்ப காலத்தில் இருந்த கடுமையான நடைமுறைகள் இன்று தளர்த்தப்பட்டு, பெரும்பாலான பக்தர்கள் எளிதான பாதையையே தேர்வு செய்கிறார்கள். சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்கான சரியான மற்றும் முழுமையான முறை என்னென்ன என்பதைப் பற்றி இங்கு விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
பழைய முறைக்கு முக்கியத்துவம் :
முந்தைய காலத்தில் சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள், வாகனங்களைத் தவிர்த்து, பெரிய பாதை வழியாகவே பயணத்தைத் தொடங்கினர். எரிமேலியில் இருந்து கிளம்பி, நீலிமலை ஏறி, அதன் வழியாகச் சன்னிதானத்தை அடைவதே பெரும்பாலானோர் கடைப்பிடித்த முறையாகும். ஒருவேளை பெரிய பாதை இல்லையென்றால் காட்டுப் பாதை வழியாகச் செல்வார்கள்; ஆனால் தற்போதுள்ள சிறிய பாதை என்பது முந்தைய காலத்தில் நடைமுறையில் இருக்கவில்லை.
சபரிமலையில் தரிசனம் செய்யும் சரியான முறை :
ஐயப்ப பக்தர்கள் தங்களது யாத்திரையைச் சரியாக நிறைவு செய்ய வேண்டிய படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
எரிமேலியில் தொடக்கம்: சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதலில் எரிமேலியில் இருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும். இதுவே சுவாமி ஐயப்பன் தனது பயணத்தைத் துவக்கிய இடமாகும். அதனால், அங்கு சென்று தர்மசாஸ்தாவை வணங்கிவிட்டுத்தான் சபரிமலை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
பம்பை நதி: அடுத்ததாக பம்பையில் புனித நீராடி, பம்பா கணபதியை வணங்கிவிட்டுத்தான், சன்னிதானம் நோக்கிய நடைப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
பதினெட்டாம் படிக்கு முன்: சன்னிதானத்தை அடைந்ததும், பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு தேங்காய் உடைத்துவிட்டு, கருப்பசாமியையும், கருப்பாயி அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு பெரிய கடுத்த சாமியை வணங்கிவிட்டுத்தான், பதினெட்டாம் படி ஏறிச் செல்ல வேண்டும்.
பரிவார தேவதைகள்: சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்த பிறகு, சன்னிதானத்தில் உள்ள பரிவார தேவதைகளான நாகராஜா, கணபதி, மாளிகைப்புரத்து அம்மன், கொச்சு கொடுத்த சாமி, வன தேவதைகள், மலை தேவதைகள், ஐயப்பன் மணிமண்டபம் ஆகிய அனைத்தையும் தரிசனம் செய்ய வேண்டும்.
விரத நிறைவு மற்றும் மாலை கழற்றுதல் :
* சபரிமலை தரிசனத்தை முடித்த பிறகு, பக்தர்கள் நேரடியாக தங்கள் வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டும். வழியில் உள்ள மற்ற கோயில்கள், அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக் கூடாது.
* சபரிமலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பி வந்ததும், அங்கிருந்து கொண்டு வந்த பிரசாதத்தை சுவாமி முன்பு வைத்து, முறையாகப் பூஜை செய்து வழிபட வேண்டும்.
* வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களுக்குப் பிரசாதங்களை வழங்க வேண்டும்.
* வீட்டில் பூஜை செய்து, வழிபட்ட பிறகே மாலையை கழற்றி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மாலை அணியும்போது எப்படி பூஜை செய்து அணிந்தார்களோ, அதேபோல பூஜை செய்துவிட்டுத்தான் மாலையை கழற்ற வேண்டும்.
* மிக முக்கியமாக, சபரிமலையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன் வழியிலேயே, பம்பையிலோ அல்லது வேறு கோவிலிலோ மாலையை கழற்றக் கூடாது.
Read More : கார்த்திகை தீபத்தன்று வீட்டில் மொத்தம் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்..? எந்தெந்த இடங்கள் சிறந்தது..?



