வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (அக்டோபர் 21) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 45 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோதி 3 விக்கெட்டுகளையும், அகேல் ஹொசைன் மற்றும் அலிக் அதனேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் முக்கிய சிறப்பம்சமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் செய்திராத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தவே இல்லை. 50 ஓவர்கள் முழுவதையும் அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு வீசினர்.
அகேல் ஹொசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடகேஷ் மோதி மற்றும் அலிக் அதனேஸ் ஆகிய 5 சுழற்பந்து வீச்சாளர்களும் தலா 10 ஓவர்களை வீசினர். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வீசிய முதல் நாடாக வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது.
Read More : வெளுத்து வாங்கிய கனமழை..!! மாணவியின் உயிரை பறித்த மண் சுவர்..!! சிவகாசி அருகே சோகம்..!!



