சாலை என்பது வெறும் போக்குவரத்துக்கான வழி அல்ல; அது மனிதர்களையும், கலாச்சாரங்களையும், வரலாறையும் இணைக்கும் ஒரு உயிரோட்டம். இந்தியாவில் ஜம்முவிலிருந்து கன்னியாகுமரி வரை 4,112 கிலோமீட்டர் நீளத்தில் பரவியுள்ள தேசிய நெடுஞ்சாலை நாட்டின் வடக்கு–தெற்கு இணைப்பின் சின்னமாக விளங்குகிறது. ஆனால் உலகளாவிய அளவில் இதைவிட வியப்பூட்டும் நீளமுடைய சாலை ஒன்று உள்ளது. அதுதான் பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை.
அலாஸ்காவின் பிரூடோ பே (Prudhoe Bay) நகரிலிருந்து தென் அமெரிக்காவின் கடைசி முனை உஷுவாயா (Ushuaia), அர்ஜென்டினா வரை சுமார் 30,600 கிலோமீட்டர் நீளத்தில் விரிந்துள்ளது இந்த சாலை. 14 நாடுகளை கடந்து செல்லும் இந்த பாதை, வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் நேரடியாக இணைக்கும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை ஆகும்.
ஒருவர் தினமும் 500 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தாலும், முழு பாதையையும் கடக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த நெடுஞ்சாலை கனடா, அமெரிக்கா, மேக்ஸிகோ, குவாடமாலா, எல் சல்வடோர், ஹொண்டூராஸ், நிகாராகுவா, கோஸ்டா ரிகா, பனாமா, கொலம்பியா, எக்வடார், பெரு, சிலி, அர்ஜென்டினா என மொத்தம் 14 நாடுகளை கடக்கிறது. இவை அனைத்தும் இணைந்து 1937 இல் இந்த சாலையின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை 1920களில் உருவாகத் தொடங்கியது. அதற்கான நோக்கம் சுற்றுலாவை ஊக்குவிப்பதும், வர்த்தகத்தை மேம்படுத்துவதுமாகும். இறுதியாக, 1960 ஆம் ஆண்டில் இது பொது பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அதிசயமானது என்னவென்றால், இந்த நெடுஞ்சாலை பெரும்பாலும் யூ-டர்னில்லாமல், நேராக செல்கிறது. அதன் வழியாக பயணிக்கும் போது பனிமூடிய மலைகள், பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், கடற்கரைப் பகுதிகள் என இயற்கையின் அனைத்து வடிவங்களையும் காணலாம்.
பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை, உலகின் நீளமான சாலை என்ற பெருமையையே மட்டும் அல்லாமல், மனித சமூகங்களின் கலாச்சார ஒருமைப்பாட்டின் அடையாளம் எனும் பெருமையையும் தாங்கி நிற்கிறது. இது வடக்கிலிருந்து தெற்குவரை மனித நம்பிக்கை, பொருளாதாரம், சுற்றுலா, மற்றும் ஒருமைப்பாட்டை இணைக்கும் சின்னமாக தொடர்ந்து பயணிக்கிறது.
Read more: 2024-ல் உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்த டாப் 10 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?



