இந்தியாவில் ரயில் பயணம் என்றாலே நீண்ட வரிசைகள், டிக்கெட் முன்பதிவு சிக்கல்கள் மற்றும் கூட்ட நெரிசல் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக, எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல், பயண கட்டணமே வசூலிக்கப்படாமல் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரயில் சேவை இந்தியாவில் இன்றும் இயங்குகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவல். பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பக்ரா-நங்கல்’ (Bhakra-Nangal) ரயில் தான் அந்த அதிசயப் பயணி.
இந்த ரயில் சேவை இந்திய ரயில்வேயால் இயக்கப்படுவதில்லை என்பதுதான் இதன் முதல் விசேஷம். புகழ்பெற்ற பக்ரா-நங்கல் அணை நிர்வாகத்தால் (Bhakra Beas Management Board) இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சட்லஜ் நதிக்கரையோரம், சிவாலிக் மலைகளின் எழில் கொஞ்சும் பாதைகள் மற்றும் மூன்று குகைப்பாதைகள் வழியாகச் செல்லும் இந்த ரயிலில் பயணிக்க ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. டிக்கெட் பரிசோதகர்களோ அல்லது டிக்கெட் கவுண்டர்களோ இல்லாத இந்த ரயில், உள்ளூர் கிராமவாசிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாழ்வாதாரத்தோடு பின்னி பிணைந்துவிட்டது.
சுமார் 13 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், பழமை மாறாத மரத்தாலான இருக்கைகள் மற்றும் ஜன்னல்களைக் கொண்ட பெட்டிகளே இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. 1948-ஆம் ஆண்டு பக்ரா அணை கட்டுமானப் பணிகளுக்காக இயந்திரங்களையும், தொழிலாளர்களையும் ஏற்றிச் செல்ல இந்த ரயில் தொடங்கப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னரும், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டும், நாட்டின் மிக முக்கியமான பொறியியல் சாதனையான பக்ரா அணைக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் இந்த இலவசச் சேவை இன்றுவரை தங்குதடையின்றித் தொடர்கிறது.
நவீன ரயில்களில் காணப்படும் ஆடம்பர வசதிகளோ அல்லது அதிவேகமோ இந்த ரயிலில் கிடையாது. ஆனால், இயந்திரத்தனமான இன்றைய உலகில் எவ்விதப் பரபரப்பும் இன்றி, இயற்கையை ரசித்தபடி ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோருக்கு இந்த ரயில் ஒரு சொர்க்கமாகும். ஒரு பெரும் உள்கட்டமைப்பு திட்டத்தின் அங்கமாகத் தொடங்கி, இன்று ஒரு மாநிலத்தின் கலாச்சாரச் சின்னமாகத் திகழும் இந்தப் பக்ரா-நங்கல் ரயில், இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது.



