தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர் சி வலம் வருகிறார்.. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்கால் விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்..
இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவான முதல் படம் மதகஜராஜா.. எனினும் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் இந்த கூட்டணியில் உருவான ஆம்பள படம் முதலில் வெளியானது.. இதை தொடர்ந்து ஆக்ஷன் படம் வெளியானது.. இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன..
‘மத கஜ ராஜா’ படம் 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.. இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் சமீபத்தில், சுந்தர் சி மற்றும் விஷால் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படக்குழுவினர் படத்தின் டைட்டில் அறிவிப்பை புரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்..
அதில் தமன்னா ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அதில் மூழ்கியிருக்கிறார். அவரின் கணவரான விஷால் தரையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில், அந்தத் தொடரில் தோன்றும் யோகி பாபு, தமன்னா வீட்டிற்கு வருகிறார்..
அப்போது, தமன்னா விஷாலிடம் டீ போடுமாறு கூறுகிறார். விஷால் சமையலறை டீ போடும் போது சில ரவுடிகள் வீட்டிற்குள் நுழைகின்றனர். சத்தமே இல்லாமல் விஷால் அவர்களை துவம்சம் செய்கிறார்.. இதனிடையே விக்கல் நிற்பதற்காக தண்ணீர் குடிக்க சென்ற யோகி பாபு விஷால் சண்டை போடுவது அதிர்ச்சியடைகிறார். நடக்கும் எதுவும் தெரியாதது போல் தோன்றும் தமன்னா, தன் கணவருக்கு தொடர்ந்து கட்டளையிடுகிறார். பின்னர் படத்தின் தலைப்பு ‘புருஷன்’ என்று வெளியிடப்படுகிறது. இந்த படம் காமெடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது புரோமோவிலேயே தெரிகிறது..
இந்தப் படத்தில் தமன்னா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். சுந்தர் சி இயக்கும் இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் குஷ்பு தயாரிக்கிறார்..



