முருகப் பெருமானை வழிபடுவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாள் சஷ்டி திதி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து தேவர்களைக் காத்தார். இதனால், பெரும்பாலான பக்தர்கள், ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி முதல் சஷ்டி அல்லது சப்தமி வரை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
மகா கந்த சஷ்டி விரதத்தில், மிளகு விரதம் மற்றும் இளநீர் விரதம் என பல வகைகள் உள்ளன. இது 7 நாட்களுக்கு மட்டுமே கடைபிடிக்கப்படும் ஒரு விரதம். ஆனால், சிலர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள்.
மாலை அணிந்தோ அல்லது அணியாமலோ இந்த விரதத்தை இருக்கலாம். இந்த ஆண்டு, மகா கந்தசஷ்டி விரதம் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. 48 நாட்கள் விரதம் இருக்க விரும்புபவர்கள், செப்டம்பர் 10ஆம் தேதியன்று விரதம் தொடங்க வேண்டும்.
விரதம் துவங்கும் முறை :
வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்தல்: விரதத்தைத் தொடங்கும் நாளுக்கு முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
விரதத்திற்கான வேண்டுதல்: செப்டம்பர் 10ஆம் தேதியன்று காலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, எதற்காக விரதம் இருக்கப் போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி, விரதத்தைத் தொடங்கலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் ஒரு காகிதத்தில் தங்கள் வேண்டுதலை எழுதி முருகனின் பாதத்தில் வைத்து, விரதத்தை தொடங்கலாம்.
காலை வழிபாடு: காலை 7 மணிக்கு முன்னதாக, குளித்து முடித்துவிட்டு, முருகனுக்குப் பூ போட்டு வழிபட வேண்டும்.
பூஜை: காலை மற்றும் மாலை என இரு வேளையும் இரண்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். எளிமையாக, ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.
மந்திரம்: பூஜை செய்த பிறகு, “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். முடிந்தால் அந்த மந்திரத்தை எழுதவும் செய்யலாம்.
விரத காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை :
மந்திரங்கள்: உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் அல்லது வேல்மாறல் மந்திரங்களைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம்.
தூய்மை: தினமும் தலைக்குக் குளிக்கத் தேவையில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று தலைக்குக் குளித்தால் போதும்.
உணவு: விரதம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடக் கூடாது. வீட்டில் மற்றவர்களுக்காக அசைவம் சமைத்துக் கொடுக்கலாம்.
நைவேத்தியம்: முருகனுக்குப் படைக்கும் நைவேத்தியத்தை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
மாதவிடாய்: பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்றச் சொல்லி, பூஜை அறைக்குச் செல்லாமல் வழிபடலாம்.
விரத முடிவு: 48 நாள் விரதம் முடிந்த மறுநாள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Read More : இந்த விநாயகர் கோயிலுக்கு சென்று 16 படிகள் ஏறினாலே போதும்..!! உங்கள் வாழ்வில் அனைத்திலும் வெற்றி உறுதி..!!