ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் சார்பில் போர் நிறுத்த மீறல்கள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் எவ்வித போர் நிறுத்த மீறல்களும் நடக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதா என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள இந்திய ராணுவம், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் எந்த போர் நிறுத்த மீறலும் நடக்கவில்லை என்றும் தவறான தகவல் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. “ஆபரேஷன் சிவசக்தி” என்ற இந்த நடவடிக்கை, இராணுவத்தின் உளவுத்துறை பிரிவுகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை (ஜேகேபி) ஆகியவற்றால் சேகரிக்கப்பட்ட துல்லியமான உளவுத்துறை உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஊடுருவல்காரர்களை துல்லியமாக எதிர்கொண்டு, அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாக வெள்ளை நைட் கார்ப்ஸ் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியிலிருந்து மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
Readmore: Tn Govt: தமிழக அரசு வழங்கும் இலவச ChatGPT பயிற்சி வகுப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க…