தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மழை காரணமாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எளிதில் பூஞ்சை பிடித்தோ அல்லது பூச்சித் தாக்குதலுக்கோ உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த சவாலான காலத்தில் உங்கள் சமையலறையையும், அதன் உள்ளே இருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களையும் எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பாதுகாக்கலாம் என்பது குறித்து சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்குக் காணலாம்.
மளிகைப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு காற்றுப் புகாத உலர்ந்த கொள்கலன்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். சேமிக்கும்போது, பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராமல் தடுக்க, பாரம்பரியமான முறையில் வேப்பிலைகளைச் சேர்த்து வைப்பது நல்லது. அரிசி, பருப்பு, தானியங்கள் போன்றவற்றைச் சேமிக்கும் முன், அவற்றை நல்ல வெயிலில் உலர்த்திய பின்பு பயன்படுத்துவது கட்டாயம். மேலும், ஈரப்பதத்தால் பாதிப்படையாமல் இருக்க, அவற்றை உயரமான அலமாரிகளில் வைக்கப் பழகுங்கள்.
சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கும் அலமாரிகளைப் பாதுகாக்க, 10 நாட்களுக்கு ஒரு முறை வினிகர் மற்றும் தண்ணீரின் கலவையால் சுத்தப்படுத்தி, நன்கு உலர வைக்க வேண்டும். ஈரத்தில் இருந்து பாதுகாக்க, அங்கே செயல்படுத்தப்பட்ட கரி (Activated Charcoal), பேக்கிங் சோடா அல்லது வேப்ப இலைகள் போன்றவற்றை வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்சுக்கொள்ள உதவும். மேலும், சமையலறை குப்பைகளை தினசரி அப்புறப்படுத்துவதுடன், அலமாரிகள் சுத்தமாகவும் வறண்ட நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதால் மளிகைப் பொருட்களின் ஆயுள் நீடிக்கும்.
மழைக்காலத்தில் மசாலாப் பொருட்கள் எளிதில் கட்டியாகவோ அல்லது பூஞ்சை பிடித்தோ கெட்டுப் போகும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, அவற்றைச் சேமிப்பதற்கு முன் வாணலியில் லேசாக வறுத்து, பின்னர் ஆற வைத்து கண்ணாடி கொள்கலன்களில் சேமித்து வைப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கலாம்.
காய்கறிகள் மற்றும் கீரைகளை மொத்தமாக வாங்கி வைக்காமல், அவை சீக்கிரமாக அழுகிவிடும் என்பதால், தேவைக்கேற்ப அவ்வப்போது மட்டுமே வாங்கிப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை வைக்கும்போது, அதிக சுமைகளை ஏற்றாமல், காற்றுப் போக்குவரத்துக்காக இடைவெளி விட்டு வைப்பதுடன், காய்கறிகளை உலர வைத்து சேமிப்பது நல்லது.
மழைக்காலத்தில், அரிசி, பருப்பு, ரவை, மாவு போன்ற மளிகைப் பொருட்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும், தேவையான அளவிற்கு வாங்கிப் பயன்படுத்துவது அவற்றைப் பராமரிக்கும் சிரமத்தைக் குறைக்கும். வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய்களைப் பொறுத்தவரை, அவற்றை உலர்ந்த கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் மட்டுமே சேமிக்க வேண்டும். மேலும், ஊறுகாயை எடுக்கும்போது உலர்ந்த கரண்டிகளை மட்டுமே பயன்படுத்துவது, பூஞ்சை பிடிப்பதைத் தவிர்க்க உதவும்.
மழைக்காலம் முடியும் வரை இந்த எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம், மளிகைப் பொருட்கள் வீணாவது முற்றிலும் தடுக்கப்படுவதுடன், உங்கள் பணமும் வீண் செலவாவதை தவிர்க்கலாம்.



