திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளி மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயிலும் முகிலன், நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு, “உங்கள் மகன் வீட்டுக்கு வந்தாரா?” என கேட்டபோது, “அவர் விடுதியில் தங்கி படிக்கிறாரே, எப்படி வீட்டுக்கு வர முடியும்?” என பெற்றோர் பதிலளித்தனர். உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர், கொத்தூரிலிருந்து திருப்பத்தூர் பள்ளிக்குத் வந்து நேரில் விசாரணை நடத்தினர். பின்னர், திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, முக்கிய விசாரணை குழு அமைத்து மாணவனைத் தேட தொடங்கினர்.
பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில், முகிலன் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு கிணற்றுப் பக்கம் செல்கிறார் என்பதும், அவர் வெளியில் செல்லவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இன்று காலை, போலீசார் பள்ளி வளாகத்தில் மீண்டும் தேடியபோது, இரும்புக் கட்டைகளால் மூடப்பட்டிருந்த ஒரு பழைய கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு மாணவனின் உடல் மீட்கப்பட்டது.
மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி கிணற்றில் இருந்து மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: டி-மார்ட்டில் இந்த D என்றால் என்ன..? இதன் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு இதோ..