எலிமினேட்டரில் திருச்சியை தோற்கடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, குவாலிஃபையர் 2வது போட்டியில் சேப்பாக்கம் அணியுடன் மோதவுள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் கண்ட கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். சரமாரியாக பவுண்டரிகளை விளாசினார். மறுபக்கம் ஷிவம் சிங் (16), விமல் குமார் (7), தினேஷ் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசிய அஸ்வின் கேட்ச் ஆனார். கடைசியில் பாபா இந்திரஜித் (27 பந்தில் 29) சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெறும் 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த திருச்சி அணி தொடரில் இருந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு செல்ல நாளை நடைபெறும் குவாலிஃபையர் 2வது போட்டியில் திண்டுக்கல் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் விளையாடும்.
Readmore: மீண்டும் வந்துவிட்டது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்!. உலக கிளப்பாக மோதும் IPL, PSL சாம்பியன்கள்!.