டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 2வது போட்டியில் சேப்பாக் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2025 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி சோழாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. லீக் போட்டிகளில் தோல்விகளையே சந்திக்காத சேப்பாக் அணி, பிளே ஆஃப் சுற்றில் ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் திருப்பூர் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் திருப்பூர் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து கேப்டன் பாபா அபராஜித் – ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாபா அபராஜித் 67 ரன்களிலும் (44 பந்துகள்), ஜெகதீசன் 81 ரன்களிலும் (41 பந்துகள்) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற கனவுடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் அஸ்வின் 20 பந்தில் 21 ரன், ஷிவம் சிங் 17 பந்தில் 21 ரன் எடுத்து அவுட்டானார்கள். பாபா இந்திரஜித் 31 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் விளாசினார். ஆனால் மான் பாஃப்னா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் விமல் குமார் சிக்சர் மழை பொழிந்து அதிரடி அரைசதம் அடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
18.4 ஓவர்களில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று டிஎன்பிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 30 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசிய விமல்குமார் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 2024ம் ஆண்டு கோப்பையை திண்டுக்கல் அணி வென்றது. அதேபோல் இந்த முறையும் கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.