தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சேப்பாக்கம் கில்லீஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் 9வது சீசன், தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளன. சேப்பாக்கம் கில்லீஸ், தான் விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து நேரடியாக முதல் குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2வது இடத்தை பிடித்துள்ள திருப்பூர் தமிழன்ஸ் அணியும் குவாலிபயருக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளை எடுத்துள்ளது.
நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், திருச்சி சோழாஸ் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்து எலிமினேட்டர் சுற்றில் மோத உள்ளன. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் குவாலிபயரில் சேப்பாக்கம் – திருப்பூர் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்த 8 தொடரிலும் களம் கண்டுள்ள சேப்பாக்கம், இந்த 9வது தொடரில் 7வது முறையாக பிளே ஆப் சுற்றில் களம் காணுகிறது. அந்த அணி, 5 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி 4 முறை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது.
திருப்பூர் அணி 4வது முறையாக, தொடர்ந்து 2வது முறையாக, பிளே ஆப் சுற்றில் களம் காண உள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட பைனலை எட்டிப்பார்க்கவில்லை. அதனால் சாம்பியன் கனவு, கானல் நீராக தொடர்கிறது. இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 6 ஆட்டங்களில் சேப்பாக்கமும், ஒரு ஆட்டத்தில் திருப்பூரும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.