தென்னிந்தியாவின் அறுவடை திருநாளான பொங்கல் கொண்டாட்டங்கள், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தத்துவத்தை பறைசாற்றும் போகி பண்டிகையுடன் கோலாகலமாக தொடங்குகின்றன. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் இப்பண்டிகை, வெறும் வீட்டை சுத்தம் செய்யும் நிகழ்வாக மட்டுமல்லாமல், வாழ்வின் தேவையற்ற கசப்பான நினைவுகளை அகற்றி, புதிய தொடக்கத்திற்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. புராண ரீதியாக மழையின் கடவுளான இந்திர தேவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும், ஆன்மீக ரீதியாக குலதெய்வத்தின் அருளை பெறும் புண்ணிய நாளாகவும் போகி போற்றப்படுகிறது.
போகிப் பண்டிகையின் மிக முக்கிய அடையாளமாக விளங்குவது ‘காப்புக்கட்டு’ எனும் சடங்கு ஆகும். வீட்டின் தலைவாசலில் வேப்பிலை, மஞ்சள், ஆவாரம்பூ மற்றும் சில மூலிகைகளை ஒரு கட்டாக கட்டித் தொங்கவிடும் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. ஆன்மீக ரீதியாக இது தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டியில் இருந்து வீட்டை காக்கும் ஒரு பாதுகாப்புக் கவசமாக கருதப்படுகிறது.
அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், பருவநிலை மாறும் இக்காலகட்டத்தில் நோய்க்கிருமிகள் பரவுவதை தடுக்க வேப்பிலை மற்றும் மஞ்சளில் உள்ள கிருமிநாசினி பண்புகளை நம் முன்னோர்கள் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஆவாரம்பூ மற்றும் வேப்பிலையின் வாசம் கொசுக்கள் மற்றும் நுண்கிருமிகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கிறது.
போகிப் பண்டிகையன்று அதிகாலையில் தேவையற்ற பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது, மனதிலுள்ள தீய எண்ணங்களை எரிப்பதற்கு இணையான ஒரு குறியீடாக செய்யப்படுகிறது. அன்று மாலை வேளையில் நிலக்கடலை, எள் மற்றும் வெல்லம் கலந்த பலகாரங்களைப் பகிர்ந்து உண்பது மரபு. மேலும், இது குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது.
அன்றைய தினம் குலதெய்வத்திற்குப் படையலிட்டு வணங்குவதால், ஆண்டு முழுவதும் அந்த தெய்வத்தின் அருள் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். தமிழர்களின் வாழ்வியலில் அறிவியலும் ஆன்மீகமும் எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கு இந்தப் போகிப் பண்டிகையும் காப்புக்கட்டு சடங்கும் ஒரு சிறந்த சான்றாகும்.
Read More : Bhogi 2026 : போகி ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?



