கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை திருக்கார்த்திகை தீபத் திருநாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்த தினம் தான் திருக்கார்திக்கை தினமாகும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது.. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது..
திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்தால், திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலும் 21 தலைமுறையினரின் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்..
முதல் நாள் பரணி தீபத்திருநாள், அடுத்த நாள் கார்த்திகை தீபத்திருநாள் அதற்கு மறு நாள் என 3 நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.. இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் டிசம்பர் 3-ம் தேதி மாலை 4.48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.08 வரை நீடிக்கிறது..
திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது.. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப் பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம்.. பொதுவாக பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையும் ஏற்றலாம்.. மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.. பெரும்பாலும் பலரும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட பின்னரே வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது.. நைவேத்தியமாக பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்கு படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்..
தீபத்திருநாள் அன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபங்கள் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம்.. எனினும் மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் வீட்டின் 27 இடங்களில் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றில் ஒரு தீபமாவது நெய் தீபமாக ஏற்றுவது அவசியம்..5,7,9,11 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம்.. வீடு முழுவதிலும் விளக்கேற்ற வேண்டும்.. அனைத்து அறைகளிலும் ஒரு ஒரு விளக்கை வைக்கலாம்.. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பின்னர் முதலில் வாசலில் தீபம் ஏற்றி விட்டு வந்து பின்னர் தான் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்..
வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் கோயில்களில் நடக்கும் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம்.. இந்த புனித நாளில் முழு மனதோடு விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபட்டால் இறைவன் அருளை முழுமையாக பெறலாம் என்பது ஐதீகம்..!



