மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டது. பாரிஸில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இங்குதான் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது.
வறுமையை நிவர்த்தி செய்வதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதே இந்த நாளின் நோக்கமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள் குடும்பங்களுக்கு மரியாதை மற்றும் பயனுள்ள ஆதரவை உறுதி செய்வதன் மூலம் சமூக மற்றும் நிறுவன ரீதியான தவறான நடத்தையை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது
வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை என சொல்லப்படுகிறது. பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் அதே வேளையில் வறுமை பட்டியலில் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக நைஜீரியா, காங்கோ, எத்தியோபியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வறுமையில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. 1990 மற்றும் 2019 க்கு இடையில் பல தசாப்தங்களாக ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, COVID-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உலகளாவிய வறுமை விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கின. 2019 முதல், வறுமையை ஒழிப்பதில் கிட்டத்தட்ட எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இப்போது உயர்-நடுத்தர வருமான நாடுகளில் வறுமையாகக் கருதப்படும் நலன்புரி நிலைகளுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
அதாவது, உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 700 மில்லியன்(70 கோடி) மக்கள் தீவிர வறுமையில் வாழ்கின்றனர், ஒரு நாளைக்கு $2.15 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
உலக வங்கியின் 2024 உலகளாவிய வறுமை அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 8.5% பேர், சுமார் 700 மில்லியன் மக்கள் – தீவிர வறுமையில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் தோராயமாக 3.5 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $6.85 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். சவால்கள் இருந்தபோதிலும், கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் தெற்காசியா கடந்த 25 ஆண்டுகளில் வறுமையைக் குறைப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இருப்பினும், 2030 ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் 7.3% பேர் இன்னும் தீவிர வறுமையில் வாழ்வார்கள் என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
ஏப்ரல் 2025 இல் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் 2025 உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் தரவின்படி, உலகின் ஏழ்மையான நாடுகள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் உள்ளன. உலகின் மிக ஏழ்மையான நாடுகள் பட்டியலில் தெற்கு சூடான் $251 தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஏழ்மையான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மிகவும் ஏழ்மையான நாடான ஏமன், தனிநபர் வருமானம் $417 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி $490 உடன் மூன்றாவது இடத்திலும், மத்திய ஆப்பிரிக்க குடியரசு $532 உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பட்டியலில் உள்ள மற்ற நாடுகளில் மலாவி ($580), மடகாஸ்கர் ($595), சூடான் ($625), மொசாம்பிக் ($663), காங்கோ ஜனநாயகக் குடியரசு ($743), மற்றும் நைஜர் ($751) ஆகியவை அடங்கும் – அவை உலகின் 10 ஏழ்மையான நாடுகளாகின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள், பயனுள்ள தேசிய மற்றும் பிராந்திய கொள்கை கட்டமைப்புகளை நிறுவுவதன் மூலம், இந்த நாடுகள் பொருளாதார மற்றும் இயற்கை வளங்கள், அடிப்படை சேவைகள் மற்றும் உரிமைகளுக்கு சமமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதை ஐ.நா. நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக்குறியீடு பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை பிடித்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். அப்போது பசி விவகாரத்தில் இந்தியா தீவிர அபாயம் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது. 1950-களிலிருந்து இந்திய அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்கள் வறுமையை ஒழிக்கப் பல திட்டங்களை, உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள், கடன்கள் பெற அணுகுவது, விவசாய தொழில் நுட்பங்கள் மற்றும் விலை ஆதரவுகள் மற்றும் கல்வி மேம்பாடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர். இத்தகைய வழிமுறைகள் பஞ்சத்தை ஒழிக்க, முழுமையான வறுமைக் கோட்டினை பாதியளவுக்கு மேல் குறைக்க, எழுத்தறிவின்மையை குறைக்கவும் மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினை குறைக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாடும் வறுமையை ஒழிக்க புது புது திட்டங்கள் கொண்டுவருவதாக படிக்கும் அதே செய்தி தாள்களில், பசி பட்டினியால் மட்டுமே உயிரை இழக்கும் மனிதர்களையும் படித்து கடந்து கொண்டிருக்கிறோம். ஏழ்மை நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க அக்கறை இல்லாததே மேலும் ஒரு காரணம்.
யார் எப்படியே, வறுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்போடு, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம். நாம் விருப்பமான உணவை சாப்பிட ஆசைப்படும் அதே வேளையில், பலர் சாப்பிட ஏதாவது இருந்தால் போதும் என்ற படியில் நிற்கின்றனர் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நாம்மால் உதவ முடியவில்லையே என நினைக்கும் பலர், தான் வீணாக்கும் உணவையும், செல்வத்தையும் வழங்க முன்வந்தாலே பலருக்கு பசிப்பினை போகும் என்பதுதான் உண்மை.
Readmore: தொழிலாளர் நல நிதி பங்கு தொகை… 2026 ஜனவரி 1-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்…!