சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி, முருங்கைக்காய் விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அதன் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. முருங்கைக்காய் இம்மாதம் தொடக்கத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரை இருந்த நிலையில், 2-வது வாரத்துக்கு பிறகு ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியும், கடந்த வாரம் ரூ.200-ஐ கடந்தும் விற்பனையானது.
தொடர்ச்சியாக வரத்து குறைவு மற்றும் தேவை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.320 முதல் ரூ.350 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ. 40 என்ற அளவில் விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முருங்கைக்காயுடன் சேர்த்து தக்காளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட தக்காளி, நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. பனிக் காலம் நீடிக்கும் பட்சத்தில், காய்கறி வரத்து மேலும் குறைந்து, விலைகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



