சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வரத்தை பொறுத்து நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன தக்காளின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர தக்காளியின் விலை 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.50, ரூ.45, ரூ.30 என மூன்று ரகங்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து முதல் தரம் 25 ரூபாய், இரண்டாம் தரம் 20 ரூபாய் என விற்கின்றனர். இதேபோல் உருளைக்கிழங்கின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 2 ரூபாய் உயர்ந்து 32, 20, 18 என மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து சீராகும் வரை தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். வரத்து சீரானால் விலை குறையும்; இல்லையெனில் அடுத்த சில நாட்களில் கூடுதல் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வளாகத் தரப்புகள் தெரிவிக்கின்றன.