மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.
தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதத்தில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் மாதமாக சொல்லப்படுகிறது. அதனால் ஆடி அமாவாசையில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை நம்முடைய முன்னோர்ளே நேரடியாக ஏற்பதாக ஐதீகம். அது மட்டுமல்ல, ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது, மூன்று தலைமுறை முன்னோர்கள் மட்டுமின்றி அதற்கு முந்தைய தலைமுறையினரையும் சென்று சேரும் என்பது நம்பிக்கை. ஆடி அமாவாசை அன்று அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று, முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாகும்.
நடப்பாண்டு, ஆடி 8ஆம் தேதியான ஜூலை 24 ஆம் தேதியில் அமாவாசை வருகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு நீர், நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதாகும். ஜூலை 24ஆம் தேதி அதிகாலை 3.06 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 1.48 மணி வரை அமாவாசை நீடிக்கிறது. சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7 மணி முதல் மதியம் 12 மணிக்கு உட்பட்டு தர்ப்பணம் கொடுங்கள். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மேலும் ஆடி அமாவாசை தினத்தில் காகத்திற்கு படையல் போடுவதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்குவதற்கு எளிய வழியாகும்.