தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பெய்த கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்து கோழிப்பண்ணை ஒன்று நீரில் மூழ்கியது. இதில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேவாரம் – மறவபட்டி சாலையில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தேவாரம் பகுதியில் தீவிரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே இருந்த ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுவட்டார விவசாயத் தோட்டங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது.
தோட்டத்திற்குள் பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ள நீர், கதிரேசனின் கோழிப்பண்ணைக்குள் புகுந்து தேங்கியது. இதில் தீபாவளி விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.
இந்தச் சம்பவம் குறித்துத் தோட்டத்தின் உரிமையாளர் கூறுகையில், “நீண்ட நாட்களாக எங்கள் தோட்டத்தின் அருகே செல்லும் நீர் ஓடையைத் தூர்வார வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால், அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாததால் தான், இன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வியாபாரத்திற்குத் தயாராக இருந்த கோழிகள் பலியாகி விட்டன. இந்த இழப்பு பெரும் கவலையை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அறிந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். கோழி இறப்பால் பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளர் கதிரேசனைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், அரசு சார்பில் உரிய இழப்பீடு நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
மேலும், இனி இது போன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு, நீர்வரத்து ஓடைகள் மற்றும் கால்வாய்களைப் போர்க்கால அடிப்படையில் தூர் வார நடவடிக்கை எடுப்பதாகவும் எம்எல்ஏ தெரிவித்தார். விற்பனைக்குத் தயாராக இருந்த 10,000-க்கும் ஏற்பட்ட கோழிகள் ஒரே இரவில் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த இந்தச் சம்பவம் தேவாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



