ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்த பழங்குடியின பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வலியால் கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக அப்பெண்ணை மீட்ட போலீசார், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், படுகாயமடைந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கிய காவல்துறை, முதல் கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர் பழங்குடியினப் பெண் என்றும், கூலி வேலைக்காக வெள்ளிக்கிழமை அன்று அவர் கிராமத்திற்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருடன் பேச்சு கொடுத்த மர்ம நபர்கள் சிலர், அப்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, அப்பெண்ணை சேலையால் மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணப்படுத்தியதுடன், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட அப்பெண், இரவு முழுவதும் நிர்வாண நிலையிலும், காயங்களின் வலியுடனும், உணவு ஏதுமின்றியும் உயிருக்குப் போராடியுள்ளார். மறுநாள் கிராம மக்கள் கண்ட பின்னரே, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரக் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தற்போது தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.



