உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை, ராஜபரி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்வர் ரௌனியர் (26) என்பவரின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இது ஒரு விபத்து என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நாகேஷ்வரின் உடலில் இருந்த காயங்கள் உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், நேஹா மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் சேர்ந்து, நாகேஷ்வரை கொலை செய்தது தெரியவந்தது. நேஹா, நாகேஷ்வருடன் வாழ விரும்பவில்லை என்றும், இருவரும் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தபோதும், அவர் தன்னை தொல்லை செய்ததாகவும் கூறியுள்ளார். இதில் இருந்து விடுபடவே, ஜிதேந்திராவுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாக நேஹா ஒப்புக்கொண்டார்.
காதல் திருமணம் செய்துகொண்ட நாகேஷ்வர், நேஹா தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கொலை நடந்த அன்று, நேஹா நாகேஷ்வரை ஒரு இடத்திற்கு வரவழைத்து, மது அருந்த செய்துள்ளார். அவர் தூங்கியதும், அவரது கால்களை துப்பட்டாவால் கட்டி, வெளியில் காத்திருந்த ஜிதேந்திராவை வரவழைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரது ஆடைகளைக் களைந்து, சடலத்தை ஒரு பைக்கில் வைத்து சுமார் 25 கி.மீ. தொலைவிற்கு சென்று வீசியுள்ளார். இந்த கொலையை விபத்து போல மாற்ற முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.