இறைவன் என்பவன் வெறும் சடங்குகளுக்குள் அடங்கிவிடுபவன் அல்ல; அவன் ஒரு பரந்து விரிந்த பேரொளி. ஆனால், நம்மில் பலரும் விரதம் இருப்பது, தினமும் ஆலயம் செல்வது போன்ற புறச்செயல்கள் மட்டுமே இறைவனை மகிழ்விக்கும் என தவறாக கருதுகிறோம். உண்மையில், இறைவனின் அருளைப் பெறுவதற்கான பாதைகள் பலவிதம். மனிதன் நாகரிகம் அடைய தொடங்கிய காலத்திலிருந்தே இயற்கையின் சக்திகளை கண்டு வியந்து, அதன் பின்னால் இருக்கும் பேராற்றலை ‘கடவுள்’ என போற்றினான். அந்தப் பேராற்றலை வணங்குவதற்கு சடங்குகளை தாண்டி, பல உன்னதமான வழிகள் உள்ளன.
வழிபாடுகளில் மிக உன்னதமானது ‘மனவழி வழிபாடு’. “மனமே கோவில்” என்ற தத்துவத்தின்படி, ஆரவாரமான சடங்குகள் இன்றி அமைதியாக தியானிப்பதும், மனதினுள் இறைவனை உணர்வதும் ஒருவனுக்கு தெளிவான சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் வழங்குகிறது. அதேபோல், மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் பஜனைப் பாடல்களைப் பாடும் ‘வாய்மொழி வழிபாடு’ எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதிற்கு உற்சாகத்தை தருகிறது. கலியுகத்தில் ‘நாமஜபம்’ என்பது இறைவனை அடைய மிக எளிய வழியாக போற்றப்படுவதற்கு இதுவே காரணம்.
கோவிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது, தீபம் ஏற்றுவது போன்ற உடல் சார்ந்த வழிபாடுகள் மனிதனுக்கு ஒழுக்கத்தையும் கட்டுபாட்டையும் பயிற்றுவிக்கின்றன. இவை வெறும் உடல் உழைப்பு அல்ல, மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள். இதேபோல், பாரம்பரியமாக நாம் பின்பற்றும் யாகங்கள், அபிஷேகங்கள் மற்றும் விரதங்கள் போன்ற சடங்கு வழிபாடுகள் ஆன்மிக ஒழுக்கத்தை வளர்ப்பதுடன், ஒரு மனிதனை தன்னடக்கத்துடன் வாழத் தூண்டுகின்றன.
நடமாடும் தெய்வங்களுக்கு செய்யும் சேவையே நாராயணனுக்கு செய்யும் சேவை என்ற வாக்கிற்கு இணங்க, ஏழைகளுக்கு உதவுவதும், நோயாளிகளைப் பராமரிப்பதும் சேவை வழிபாடு எனப்படும். இது மனிதனைச் சமூகப் பொறுப்புணர்வுடன் மாற்றுகிறது. அதேபோல், ஆன்மிக நூல்களை வாசிப்பதன் மூலமும், ஆழ்ந்த சிந்தனை மூலமும் இறைவனை உணர்வது அறிவு வழிபாடாக கருதப்படுகிறது. இயற்கையை மதிப்பதும், அதில் இறைவனை காண்பதும் நமது மண்ணின் மிக மூத்த வழிபாட்டு முறையாகும்.
இறுதியாக, இறைவனை மகிழ்விக்கும் மிக உயர்ந்த வழிபாடாக கருதப்படுவது நல்லொழுக்கம் மட்டுமே. நேர்மை, அன்பு, கருணை போன்ற நற்பண்புகளுடன் வாழ்வதே உண்மையான பக்தி. ஆலயங்களுக்கு செல்ல முடியாத சூழலிலும், ஒருவன் நற்செயல்களை செய்யும் நல்ல மனிதனாக வாழ்ந்தால் இறைவனின் அருள் அவனை தானாக வந்தடையும். கடவுளை வெளியே தேடாதே, உனக்குள்ளே தேடு எனும் ஞானிகளின் வாக்குப்படி, தூய்மையான மனமே உண்மையான ஆன்மிகத்தின் அஸ்திவாரம்.
Read More : இன்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமை..!! அம்மனுக்கு பிடித்த எலுமிச்சை மாலை..!! இப்படி வழிபட்டு பாருங்க..!!



