அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ப்ராக்டர் & கேம்பிள் (P&G), வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 7,000 வேலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த பணி நீக்க நடவடிக்கை, மொத்த ஊழியர்களில் 6% அளவுக்கு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சந்தையை வைத்திருக்கும் இந்த நிறுவனம், சீரற்ற நுகர்வோர் தேவை, விநியோகச் சங்கிலி சிக்கல்கள், இறக்குமதி வரிகள் எனப் பல காரணங்களால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
P&G, சீனாவிலிருந்து மூலப்பொருட்கள், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட சில பொருட்களை இறக்குமதி செய்கிறது. டொனால்ட் டிரம்பின் வரி நடவடிக்கைகள் இந்த இறக்குமதிகளின் செலவை பெரிதும் உயர்த்தியுள்ளது. இந்நிலையில், பாரிஸ் நகரில் நடந்த டாய்ச் வங்கி நுகர்வோர் மாநாட்டில், P&G நிர்வாகிகள், சில சந்தைகள் மற்றும் பிராண்டுகளில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு, சில பங்குகள் விற்பனை செய்யும் வாய்ப்பும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
2025-ம் ஆண்டு முழுவதும் நுகர்வோர் செலவினங்கள் அழுத்தமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் P&G மற்றும் Unilever போன்ற நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளர்கள் கூடுதல் விலையிலான விற்பனையிலிருந்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜூலை மாதம் இந்த மாற்றங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை P&G பகிரவுள்ளது. தொழில் நுட்ப மாற்றங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, உலகின் முன்னணி FMCG நிறுவனங்களின் திசையும் மாறும் முன்னோட்டமே இது எனக் கருதப்படுகிறது.
Read more: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!