இப்போதெல்லாம் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, இளைஞர்களுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மூட்டு வலி, வீக்கம் மற்றும் இறுக்கம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பலர் ஐஸ் கட்டிகள் மற்றும் ஹீட் பேட்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த இரண்டு சிகிச்சை முறைகளையும் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து குருகிராமில் உள்ள சி.கே. பிர்லா மருத்துவமனையின் எலும்பியல் துறை இயக்குநர் டாக்டர் பிரவீன் டிட்டல் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
நாள்பட்ட மூட்டு வலி மற்றும் இறுக்கத்தைக் குறைக்க ஹீட் சிகிச்சை (தெர்மோதெரபி) மிகவும் பயனுள்ளது. சூடான ஒத்தடம் கொடுக்கும்போது, அது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்த ஓட்டத்தையும், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தையும் அதிகரிக்கிறது. இது தசைகளைத் தளர்த்தி, மூட்டுகளின் அசைவை மேம்படுத்த உதவுகிறது.
கீல்வாதம் போன்ற நோய்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சிக்கு முன்பு தசைகளைத் தளர்த்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். காயம் ஏற்பட்டவுடன் ஹீட் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான துணி அல்லது ஹீட்டிங் பேடை 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
ஐஸ் கட்டிகளை எப்போது பயன்படுத்த வேண்டும்?
காயமடைந்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, வீக்கம் மற்றும் திசு சேதத்தைத் தடுக்க ஐஸ் சிகிச்சை உதவுகிறது. இது வலியுள்ள பகுதியை உணர்ச்சி இழக்கச் செய்வதோடு, நரம்புகளின் செயல்பாட்டையும் குறைத்து, உடனடி வலி நிவாரணம் அளிக்கிறது. சுளுக்கு அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திடீர் வலி அல்லது வீக்கம் ஏற்படும்போது ஐஸ் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோலின் மீது பயன்படுத்தக் கூடாது. ஒரு மெல்லிய துணியில் சுற்றி, 10 முதல் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இரண்டையும் எப்போது பயன்படுத்த வேண்டும்..?
உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க முதலில் ஐஸ் சிகிச்சையையும், அதன் பிறகு தசைகளைத் தளர்த்த ஹீட் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். நாள்பட்ட வலியுடன் வீக்கமும் இருந்தால், முதலில் வீக்கத்தைக் குறைக்க ஐஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க ஹீட் சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படி ஐஸ் மற்றும் ஹீட் சிகிச்சைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது விரைவாக குணமாக உதவும். இந்த இரண்டு சிகிச்சைகளும் பயனுள்ளவை என்றாலும், அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலமே சிறந்த பலன்களை பெற முடியும்.