தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. விஜய் இதுவரை, பெரம்பூர், திருச்சி கிழக்கு, நெல்லை ஆகிய இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார்..
நேற்று காரைக்குடியில் ரோடு ஷோ சென்ற அவர் உரிய நேரத்திற்கு செல்லாததால் பரப்புரை செய்யாமலே சென்னை திரும்பினார்.. இந்த சூழலில் விஜய் இன்று கடலூரில் பிரச்சாரம் செய்யவிருந்தார்.. ஆனால் அந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.. கடலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். நிர்வாக காரணங்களுக்காக பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் தவெக நிர்வாகிகள் பொதுவெளியில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் மலர்விழி போட்டியிடுகிறார்.. இவர் கடந்த 6-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.. தேர்தல் பிரச்சாரத்தை கமுதியில் இருந்து தொடங்குவதா அல்லது முதுகுளத்தூரில் இருந்து தொடங்குவதா என்பதில் தவெகவின் இரு தரப்பினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது..
கமுதியில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கமுதி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கவாஸ்கர் கூறியுள்ளார்.. ஆனால் முதுகுளத்தூரில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்..
இந்த கூட்டத்தில் கமுதி மற்று முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி பொதுவெளியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர்.. மேலும் மோதலின் போது முதுகுளத்தூர் தவெக வேட்பாளர் மலர் விழி, நிர்வாகிகளை ஒருமையில் பேசி வசைபாடி உள்ளார்.. இந்த மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலர்விழி இதுவரை அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது உட்கட்சி பூசலால் தவெக வேட்பாளர் மலர்விழி பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. மேலும் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், முதுகுளத்தூர் தொகுதி தனக்கு கிடைக்காததால் விரக்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது..
Read More : “விஜய் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்..” பியூஷ் கோயல் விமர்சனம்..!



