தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாரப்பத்தியில் நாளை நடக்கும் விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் 6 இடங்கள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறை, குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு திண்பண்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகெ தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். 19 வயதான இவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
தவெக மாநாட்டிற்கு நண்பர்களுடன் சேர்ந்து பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்றபோது மாணவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.