தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் நிர்வாகிகள் தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாக கருதப்படும் தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி, தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்கி வருவதும், மாவட்ட செயலாளர் தலைமறைவாக இருப்பதும் தேனி மாவட்ட தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



