2026-ம் ஆண்டு தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார்.
அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. கடந்த 4-ம் தேதி நடந்த தவெகவின் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார். எனினும் பாஜகவும், திமுகவும் மீண்டும் மீண்டும் தவெகவிற்கு கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வருகின்றன.. ஆனால் ஒருபோதும் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று தவெக மறுத்து வருகிறது.. எனினும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் பட்சத்தில், அதிமுக பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..
மேலும் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. இதனிடையே தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.. ஆகஸ்ட் 25-ம் தேதி, இந்த மாநாடு நடைபெற உள்ளது..
எனினும் தவெக தலைவர், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.. கோவை அல்லது மதுரையில் விஜய் களமிறங்குவார் என்று முதலில் கூறப்பட்டது..
இந்த நிலையில் நாகர்கோவிலில் விஜய் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.. இதுதொடர்பாக போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.. அதில் “ 2026-ல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்க இருக்கும் வெற்றித்தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அன்புடன் அழைக்கிறோம்.. நமது கழகத்தின் வெற்றிப் பயணம் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் தான்.. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால், அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : ஓரணியில் கபடதாரிகள்.. பாஜக முதுகிற்கு பின்னாள் ஒளிந்து பம்மும் திமுக.. விஜய் மீண்டும் அட்டாக்..