தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்..
குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், நேற்று டிடிவி தினகரனும் வெளியேறினார்.. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. திமுக, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இதில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் தவெக உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை செப்டம் 13-ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவர் தமிழகம் முழுவதும் 10 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மெற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. தனது பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகளை பற்றி பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
தவெக தலைவர் விஜய் சமீபத்தில் அக்கட்சியின் 2வது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்.. இந்த மாநாட்டில் வழக்கம் போல் அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தும், பாஜகவை லேசாக கண்டித்தும் பேசியிருந்தார்.. அதே போல் அதிமுகவினரின் வாக்குகளை குறிவைத்தும் விஜய் பேசியிருந்தார்.. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோரை பாராட்டியும் விஜய் பேசியிருந்தார்.. மேலும் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும் ஆட்சியிலும் பங்கு வழங்கப்படும் எனவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..